புகழ்பெற்ற மலையாள சினிமா நடிகர் நெடுமுடி வேணு காலமானார்..!

 

மலையாள சினிமாவின் மூத்த நடிகரும் மூன்று முறை தேசிய விருது வென்றவருமான நெடுமுடி வேணு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.

செய்தியாளராக வாழ்க்கையை துவங்கிய நெடுமுடி வேணு மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அதன்மூலம் 1978-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எதார்த்தமான அவருடைய நடிப்பு மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கதாநாயகனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து தனி முத்திரை பதித்தார். 1980 முதல் 1995 வரையிலான காலக்கட்டத்தில் நெடுமுடி வேணு இல்லாத மலையாளப் படங்களே கிடையாது என்று சொல்லலாம். அந்தளவுக்கு மலையாள சினிமாவில் செல்வாக்கு மிகுந்த நடிகரானார்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி பிறகு கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 படத்திலும் அவர் நடித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நெடுமுடி வேணு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதை தொடர்ந்து அவருடைய உடல்நிலையில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர பிரிவில் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவருடைய மறைவு மலையாள திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது. மலையாள சினிமாவில் நடிப்புக்கு புதிய இலக்கணம் வகுத்த நடிகர்களில் முக்கியமானவர் நெடுமுடி வேணு. தன்னுடைய தனித்துவமிக்க நடிப்புக்காக 3 முறை தேசிய விருதுகளையும், 6 முறை கேரள மாநில திரைப்பட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

நெடுமுடி வேணுவின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகர்கள், தென்னிந்திய நடிகர் சங்கம், பொதுமக்கள் என்று பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.