வரலாற்றிலேயே முதன்முறையாக வெளியான அரசியல் விளம்பரம்... அதுவும் திரையரங்கில்...
திருச்சியில் பாரம்பரியமான திரையரங்குகளுள் ஒன்றான, ஒருகாலத்தில் மாரிஸ் என்றழைக்கப்பட்ட தற்போது எல்.ஏ. சினிமா என்ற பெயரில் இயங்கிவரும் திரையரங்கிலும், சோனா – மீனா திரையரங்கிலும் முற்றிலும் வித்தியாசமான ஒரு விளம்பரத்தைப் பார்த்து பூரிப்படைந்திருக்கிறார்கள் திருச்சியைச் சேர்ந்த சினிமா ரசிகர்கள்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் திமுகவின் முதன்மை செயலருமான கே.என்.நேருவின் மகன் கே.என். அருண்நேரு சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யாகியிருக்கிறார். அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வித்தியாசமான முயற்சியாக திரையரங்குகளில் விளம்பரம் செய்திருக்கிறார், திருச்சியைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் மணிவண்ணபாரதி.
திரையரங்கில் இந்த விளம்பரம் வெளியாகியிருக்கிறது. அதுவும், ”தமிழகத்திலேயே முதல் முறையாக” என்று சன் டிவி பாணியில், “திரையரங்க வரலாற்றிலேயே முதல்முறையாக” அரசியல் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகியிருப்பதும் இதன் தனிச்சிறப்புதான்.