சின்மயி மீது கை போட்டார்... முத்தம் கொடுத்தார்  - வைரமுத்து குறித்து சின்மயி தாயார் பரபரப்பு பேட்டி..! 

 

சின்மயி தாயார் பத்மாசனி அந்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

வைரமுத்து சின்மயியை போனில் அழைத்து, உன் பெயரை தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப் போகிறோம், விரைவாக வா என்று அழைத்தார். இதனையடுத்து நானும், சின்மயியும் வைரமுத்து இருக்கும் இடத்திற்கு சென்றோம். நான் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள் சின்மயி அவரை பார்க்கச் சென்று விட்டாள். நான் படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்வதற்குள், சின்மயி தலை கலைந்து ஒற்றை செருப்புடன் கீழே வந்தாள். எனக்கு அங்கேயே ஏதோ தவறாக நடந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. நான் பிற பெற்றோர்கள் போல அந்த இடத்திலேயே என்ன நடந்தது என்று கேட்டு, அவளிடம் வார்த்தையை பிடுங்க வில்லை. அவளை அமைதியாக இரு என்று சொல்லி, காரில் அழைத்து வீட்டிற்கு வந்து விட்டேன்.

அந்த இடத்திலேயே நீங்கள் காவல்துறைக்கு போன் செய்திருக்கலாமே, உடனே வைரமுத்துவிடும் இது குறித்து கேட்டிருக்கலாமே என்று நீங்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் எது நடக்குமோ அதைத்தான் செய்ய வேண்டும்.நடக்காதவற்றையெல்லாம் நாம் செய்யக்கூடாது. நாங்கள் அப்போது மானம், கௌரவத்திற்கு அஞ்சி அந்த விஷயத்தை மறைத்தே வைத்திருந்தோம்.

வைரமுத்து சின்மயி தோளின் மீது கை போட்டார். நெற்றியில் முத்தம் கொடுத்தார். அதை அவள் வீட்டிற்கு வந்த பின்னர் என்னிடம் சொன்னாள். உடனே நான் அவளிடம் சரி இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று கூறினேன். ஒருவேளை நான் கேட்டிருந்தால் கூட வைரமுத்து அன்பாக முத்தமிட்டேன் என்று கூட சொல்லி இருக்கக்கூடும். ஆனால் சின்மயிக்குதான் தெரியும். அது உண்மையில் நல்ல தொடுதலா இல்லை கெட்ட தொடுதலா என்பது அவளுக்குதான் தெரியும். அது கெட்ட தொடுதலாக இருந்த காரணத்தினால்தான் அவளுக்கு கம்பளிப் பூச்சி ஊறி ஓடி வந்திருக்கிறாள்.

மீ டூ என்ற ஒரு மூவ்மெண்ட் வரும் பொழுது, பலரும் சின்மயிடம் உங்களுக்கு ஏதாவது நடந்திருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் நோண்டும்பொழுதுதான், சின்மயி எனக்கும் நடந்திருக்கிறது என்று இது குறித்து சொன்னாள். அப்போது கூட நான் சின்மயிடம் காலில் விழுந்து கேட்டுக்கொண்டு, தயவுசெய்து இந்த விஷயத்தை வெளியே சொல்லாதே என்று சொன்னேன். ஆனால் அதையும் மீறி அவள் சொன்னாள். ஆனால், நான்கு வருடங்களில் சின்மயி எடுத்திருக்கும் நடவடிக்கை, நல்ல காரியம் என்பது எனக்கு புரிகிறது.

வைரமுத்து அந்த சமயத்தில் தேசிய விருதுகள் வழங்கும் குழுவை கைக்குள் வைத்திருந்தார்.. அப்படி இருக்கும் போது இந்த விஷயத்தை நாங்கள் வெளியே சொன்னால், அது என்னுடைய குழந்தையின் வாழ்க்கையை பாதித்து விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.