வெளியானது ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ கிளிம்ஸ் வீடியோ..!
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டு சீர்குலைந்த கட்டிடங்களும், அதையொட்டி நீளும் காட்சிகளும் மிரட்டுகின்றன. ஆங்காங்கே குண்டுகள் வெடித்து சிதைந்த கட்டிடங்கள் சிதறிக்கிடக்கும் காட்சிகள், பிணங்கள், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர், மக்களை அடைத்து துன்புறுத்தும் காட்சிகள், வாழ வழியற்று தவிக்கும் மக்கள் என காட்சிகள் அழுத்தமாக விரிகின்றன.
படத்தின் கலர் டோன் கவனிக்க வைக்கிறது. பின்னணி பாடல் மனித நேயத்தை வலியுறுத்துகிறது. இறுதியில் மீண்டும் வெகுஜன ரசனைக்கு திரும்பும் வீடியோவில் “என்னத் தேடி தமிழ் கண்டிப்பா வருவான்” என நாயகி சொல்ல ஆதியின் நின்றுகொண்டிருக்கும் காட்சி காட்டப்படுகிறது. இந்த ஒரு காட்சிதான் ஹிப்ஹாப் ஆதியின் படம் என்பதற்கு சாட்சி. மற்றபடி கிளிம்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்து, தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடைசி உலகப்போர்’. படத்தில் நாசர், நட்டி (நடராஜ்) அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.