நாங்கள் எப்படி மீள போகிறோம் என்றும் தெரியவில்லை - டெல்லி கணேஷ் மகன் பேட்டி..! 

 
 காமெடி கதாபாத்திரங்களை மட்டும் இல்லாமல் குணச்சித்திர கேரக்டர்களையும் ஏற்று நடித்து புகழ்பெற்றவர் நடிகர் டெல்லி கணேஷ். சமீபத்தில் இவருடைய எண்பதாவது பிறந்த நாளும் வெகுவாக கொண்டாடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலே நேற்றைய தினம் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் டெல்லி கணேஷ். இவருடைய மறைவு குடும்பத்தாரை மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களையும் வெகுவாக பாதித்துள்ளது. தற்போது தமிழ் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தமது அஞ்சலியை டெல்லி கணேசுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது தந்தையின் அதிர்ச்சிகரமான மறைவை தாங்கிக் கொள்ள முடியாத மகன் கொடுத்த பேட்டி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அதன்படி அவர் கூறுகையில், அப்பாவுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு எதுவும் இருந்ததில்லை. அவ்வபோது ஒரு சில உடல் உபாதைகள் வரும் அதற்கு மருத்துவ முறைகளை சரியாகவே பின்பற்றி வந்தோம்.

ஆனால் இப்படி திடீரென இறப்பார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை உடல்நிலை சரியில்லாமல் சீரியஸ் ஆக இருந்திருந்தால் கூட காப்பாற்ற முயற்சி செய்திருப்போம். ஆனால் எங்களால் நம்ப முடியாத அளவுக்கு இவரது சாவு அமைந்துள்ளது.

நேற்று இரவு கூட எங்களுடன் நன்றாக பேசிவிட்டு தான் தூங்க சென்றார். அப்போது ஒரு மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்ப முயற்சித்தோம். ஆனால் அவர் அசைவற்று இருந்தார். உடனே மருத்துவரை அழைத்துப் பார்த்தபோது அப்பா இறந்துவிட்டார் என்று கூறினார். இப்படி ஒரு இறப்பு யாருக்குமே வரக்கூடாது. எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

நாங்கள் எப்படி மீளப் போகின்றோம் என்றும் தெரியவில்லை. அப்பாவின் உடல்நிலை குறித்து எங்களிடம் தெளிவாகக் கூறியிருந்தால் நாங்கள் அதற்கு ஏற்றால் போல எதுவும் செய்து இருப்போம். அவருடைய உடலில் எந்த பிரச்சனையுமே இருந்ததாக தெரியவில்லை. இவருடைய மறைவு எதிர்பார்க்காத ஒன்று.. நாளை (அதாவது இன்று) காலை இறுதிச் சடங்கு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று டெல்லி கணேசன் மகன் தெரிவித்துள்ளார்.