அமரன் படத்தில் இதை நான் குறையாக பார்க்கிறேன் - இயக்குநர் வசந்தபாலன்..!

 

அமரன் படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் வசந்தபாலன்.அமரனின் கதை மற்றும் காட்சிப்படுத்தலில் தரம் இருந்தாலும், அது காஷ்மீரின் அரசியல் மற்றும் சமூக நிலைமைகளை தீவிரமாகப் பேசாதது குறையாக இருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார்.

அவரின் கருத்துப்படி, காஷ்மீரின் உண்மை நிலைமைகள் மற்றும் அரசியல் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் தருணங்களில் சினிமா முக்கிய பங்கை வகிக்க வேண்டும். இந்நிலையில் அமரன் போன்ற படம் காஷ்மீர் பிரச்சனைகள் குறித்து பேசாமல் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக வசந்தபாலன் எடுத்து சொல்லியுள்ளார்.

 “ராணுவம் மற்றும் யுத்தம் சம்மந்தமான திரைப்படங்களைக் காண்பது எனக்கு பெரும் அயர்ச்சியையும் மனசோர்வையும் தரும். கொத்து கொத்தான மரணங்களையும், வெடிகுண்டு வெடித்து மனித உடல் துண்டாவதையும் படம் முழுக்க காண்பது வாழ்க்கை குறித்த பயத்தை அதிகரிக்கும். ஆகவே அதை காண்பதை தவிர்ப்பேன்.விமர்சனரீதியாக மரியாதைக்குரிய திரைப்படமாக மாறினால் மட்டுமே மனதைத் திடப்படுத்திக்கொண்டு பார்க்க முயல்வேன்.

காஷ்மீர் தீவிரவாதம் குறித்த ராணுவத் திரைப்படங்களில் அங்கு உண்மையாக நிலவும் காஷ்மீர் அரசியலை பேசாமலே அல்லது ஒரு சார்பாக பேசியே திரைப்படங்கள் கடந்து போகிறது என்கிற வருத்தமும் எழும். அரசியலைப் பேசிய ஒன்றிரண்டு திரைப்படங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பெரும் கவனம் பெறாமலே போய் விட்டன.

சென்றாண்டு காஷ்மீருக்கு படப்பிடிப்பு சென்ற சில தினங்களில் ஆப்பிளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமல் ஆப்பிள் பயிரிடும் விவசாயிகள் திண்டாடுவதை அறிந்தேன். இப்படி காஷ்மீர் பற்றிய பல கேள்விகள் மனதில் சுழன்றடித்தவண்ணம் இருக்கின்றன.

அதனால் அமரன் திரைப்படத்தின் அறிவிப்பில் இருந்தே அந்த திரைப்படத்தைக் காணவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு உருவாகாமலே இருந்தது. முன்னோட்டம் சிறப்பாக இருந்தது இருப்பினும் என் முதல் சாய்ஸ் அமரன் இல்லை என்கிற முடிவோடு தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டேன்.

தீபாவளி அன்று காலையில் இருந்தே அமரன் பற்றிய நல்லவிதமான விமர்சனங்கள் என்னைச் சுற்றி பட்டாசாக வெடித்தவண்ணம் இருந்தது, பார்க்கலாமே என்று முயற்சித்தால் ஞாயிறு வரை முன்பதிவிலே அத்தனை காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.

நேற்று தான் சென்னை வந்து அமரன் படத்தைப் பார்த்தேன். காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படாமலே தான் இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே” என்று எழுதியுள்ளார்.

வசந்தபாலன் போன்ற இயக்குநர்கள் எதிர்பார்ப்பதுபோல், சினிமாவில் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் வெளிப்படையாகக் கூறப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

allowfullscreen