ஜல்லிக்கட்டில் என்னுடைய காளையும் பங்கேற்க வேண்டும் என்பது எனது ஆசை - கார்த்தி!

 

செம்பொழில் இயக்கம் சார்பில் சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா நடைபெறுகிறது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த விழா 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடக்கின்றன. இவ்விழாவில் பாரம்பரிய உணவு, தானிய வகைகள், மரங்களால் ஆன கைவினை பொருட்கள், பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் ராஜபாளையம், சிப்பிப்பாறை இன நாய்கள், காங்கேயம் இன மாடுகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவைகளை ஆர்வமாக கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்வுகளை கண்டுகளிக்க ஒரு நபருக்கு 100 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியினை நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி தொடங்கி வைத்தார். அதற்கு பிறகு பேசிய அவர் கூறியதாவது:-

சென்னையில் இந்த மாதிரியான ஒரு திருவிழா நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. கொரோனாவுக்கு பிறகு அனைவரையும் ஒன்று சேர்ப்பது கடினமான ஒன்று. சென்னையில்தான் நுகர்வோர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எட்டு கோடி பேர் தமிழ்நாட்டில் மக்கள் தொகை என்றால் அதில் இரண்டு கோடி பேர் இங்குதான் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக இதுபோன்ற திருவிழாக்கள் நடத்த வேண்டும் என்று நினைத்தோம். பலவகையான அரிசி வகைகள் இருக்கின்றன.

தமிழ் பாரம்பரியத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கு இதுமாதிரியான விழாக்கள் கண்டிப்பாக தேவை என்பது எனது கருத்து. இந்த விழாவை ஒருங்கிணைத்த செம்பொழில் குழுவுக்கு நன்றி. சென்னையில் இப்படி ஒரு திருவிழா நடப்பது ரொம்பவே அரிது. என்னுடைய குடும்பத்தினரையும், குழந்தைகளையும் இங்கு வரவழைக்கவிருக்கிறேன். கிராமத்தில் நடக்கும் விழாக்களையே குடும்பத்துடன் சென்று பார்ப்பது என்பதும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. எனவே சென்னையில் நடக்கும் இந்த விழாவுக்கு உங்கள் குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மாட்டினை காயப்படுத்துவார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு என்பது ஏறு தழுவுதல். முக்கியமாக மாட்டோடு விளையாடுவார்கள். மெய்யழகன் ஷூட்டிங்கின்போதுதான் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்து ரசித்தேன். சென்னையில் எனது தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்று கேள்விகள் வருகின்றன. இங்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென்றால் பல உரிமைகளை வாங்க வேண்டியிருக்கிறது. எனவே அப்படி ஒன்று நடந்தால் அந்த ஜல்லிக்கட்டில் என்னுடைய காளையும் பங்கேற்க வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.