காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியின் பேட்டி..!

 

காந்தாரா படத்தை இயக்கியதோடு, அதில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி இருந்தார் ரிஷப் ஷெட்டி. கடந்த ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்.

காந்தாரா படத்துக்கு முந்தைய நிகழ்வுகளை மையமாக வைத்து அப்படத்தை இயக்குகிறார் ரிஷப் ஷெட்டி. இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா திரைப்படமும் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரிஷப் ஷெட்டி, தான் கன்னட மொழியில் மட்டும் தான் படங்களை இயக்குவேன் என திட்டவட்டமாக கூறி உள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதுகுறித்து அவர் பேசியபோது, எனக்கு பிற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் வருகின்றன.நான் ரசிகனாக இருக்கும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தன. ஆனால் நான் அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டேன். நான் கன்னடத்தில் மட்டும் தான் படம் பண்ணுவேன். கன்னட சினிமா ரசிகர்கள் தான் எனக்கு சப்போர்ட் ஆக இருந்துள்ளனர். அதற்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பிற மொழிகளில் படம் பண்ண வேண்டும் என்று எண்ணுபவனல்ல நான்.

எனக்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. நான் என்ன பண்ணினாலும் அது கன்னடத்தில் மட்டும் தான் பண்ணுவேன். அப்படி இல்லையென்றால் உலகளவில் சென்றுசேரும்படியான படைப்புகளை கொடுப்பேன். கன்னடத்தில் எடுத்தாலும் அதனை டப்பிங் செய்துகொள்ளலாம். ஏனெனில் எமோஷன் எல்லா மொழிக்கும் ஒன்று தான். எல்லாருக்கும் அது கனெக்ட் ஆகும்” என ரிஷப் ஷெட்டி பேசி இருக்கிறார்.