ஜெயிலர் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது..!! லியோவுக்கு போட்டியா..??
 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

நடிகர் ரஜினிகாந்தின் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இதை ’கோலமாவு கோகிலா’, ‘பீஸ்ட்’ பட இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகிறார். 

கடந்தாண்டு ஜூன் மாதம் இந்த படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கப்பட்டன. சென்னை, ஹைதராபாத், கடலூர், ஜெய்சல்மார், மங்களூரு போன்ற பகுதிகளில் ஜெயிலர் ஷூட்டிங் நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் கேரளாவின் சாலக்குடி பகுதியில் இந்த படத்துக்கான கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன.

அவை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடத்தப்பட்டு, அக்டோபர் மாதம் ஜெயிலர் படம் வெளியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதன்படி இந்த படம் லியோவுக்கு போட்டியாக களமிறங்கும் என்று சொல்லப்படுகிறது.

ஜெயிலர் படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசயமைப்பு பணிகளை அனிருத் மேற்கொள்கிறார். பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் படத்துக்கு அனிருத் இசையமைக்கும் இரண்டாவது படம் இது. விரைவில் ஜெயிலர் படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.