2 பாகங்களாக தயாராகும் ஜீத்து ஜோசப் - மோகன்லால் - த்ரிஷா படம்..!!

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், அவருடைய நடிப்பில் மேலும் ஒரு புதிய படம் இரண்டு பாகங்கள் கொண்ட  கதையாக தயாராகவுள்ளது. 
 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்த த்ரிஷா, 2015-ம் ஆண்டுக்கு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். இதற்கு அவர் தனி ஹீரோயினாக நடித்து வெளியான படங்களின் தொடர் தோல்விகள் தான் காரணம் என்று கூறப்பட்டது.

அப்போது கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த ‘96’ படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. அனைவரும் த்ரிஷாவை ‘ஜானு’... ‘ஜானு’ என்று குறிப்பிட்டு தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.  இது த்ரிஷாவின் கம்பேக் படம் என்றே கூறப்பட்டது. தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடித்து மக்கள் மனங்களை வென்றார். அது அவருக்கு  மீண்டும் உச்சநட்சத்திர அந்தஸ்த்தை பெற்று தந்துள்ளது

இதையடுத்து அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்த படத்தில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது. பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து பல பெரிய படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார்.
அதில் விஜய்யுடன் அவர் நடித்து வரும் ‘லியோ’ குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். இதையடுத்து மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கும் ‘ராம்’ படத்தில் மோகன்லால் உடன் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் ஷெட்யூல் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் மீண்டும் படப்பிடிப்பை துவங்க முடியவில்லை. அப்போது இந்த படம் ஒரு பாகம் கொண்ட கதையாக எழுதப்பட்டது. இப்போது மீண்டும் ராம் படத்துக்கான பணிகள் துவங்கவுள்ளன. இந்நிலையில் இயக்குநர் ஜீத்து ஜோசப் ராம் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே த்ரிஷா நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ பெரும் வரவேற்பை பெற்றது. இதனுடைய இரண்டாவது பாகத்துக்கும் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த வரிசையில் தற்போது ‘ராம்’ படமும் இணைந்துள்ளது. முன்னதாக இந்த படம் அறிவிக்கப்பட்ட போதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது. இப்போது படம் 2 பாகங்களாக தயாராவது, மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.