”அட மனச விட்டு பாராட்டுடீங்களே” தீபிகா படுகோன் குறித்து கங்கனா..!!

இந்தி சினிமா நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்றதை குறித்து சக நடிகை கங்கனா ரனாவத் மனம் விட்டு பாராட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். தொடர்ந்து இந்தி சினிமா உலகில் நிலவி வரும் வாரிசு ஆதிக்கத்தை, அவர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் இவரை ஒட்டுமொத்த பாலிவுட் உலகமே ஒதுக்கிவைத்துவிட்டது. அதனால் ‘மணிகர்னிகா’ படம் முதல், பாலிவுட்டில் கங்கனா தனித்து தான் இயங்கி வருகிறார்.

இந்தி சினிமா உலகில் இருக்கும் யாரையும் கங்கனா ஆதரித்து பேசமாட்டார். யாருக்கும் புகழ் கொடி உயர்த்தமாட்டார். இந்தி சினிமா என்பது வேறு, கங்கனா ரனாவத் வேறு என்பது தான் நிதர்சனமான உண்மை. இதன்காரணமாக அவர் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்திய சார்பில் போட்டியிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தீபிகா படுகோன் மேடையில் தோன்றினார். இந்திய சினிமாவைக் குறித்தும், இந்தியாவை பற்றியும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்த நடிகை கங்கனா ரனாவத், ”எவ்வளவு அழகாக உள்ளார் தீபிகா படுகோனே. ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைத்து, அதன் முகமாக, அதன் நற்பெயரை தோள்களில் சுமந்துகொண்டு, மிகவும் அன்பாகவும் நம்பிக்கையுடனும் பேசுவதைப் பார்ப்பது எளிதல்ல. இந்தியப் பெண்கள் சிறந்தவர்கள் என்பதற்கு தீபிகா சாட்சியாக நிமிர்ந்து நிற்கிறார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.