விவசாயிகளுக்கு நடிகர் கிஷோர் வேண்டுகோள் :  மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்துங்கள்..! 

 

 ஆடுகளம், ஜெயம்கொண்டான், வம்சம், வடசென்னை, ஹரிதாஸ் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கிஷோர். 

மேலும் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் ரவிதாசன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் பொய்யான வதந்திகளைப் பரப்பும் பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும் என்று நடிகர் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"ஜெய் ஜவான் ஜெய் கிசான்.. விளை பொருட்களுக்கு நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா?? ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலையை கொடுப்பேன் என்று கூறிய கபட அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் மறுபுறம் ஊடகங்களே விவசாயிகளை தேச துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன. இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்லுவது? விவசாயிகளை தடுக்கும் நோக்கில் சாலைகள் தோண்டப்பட்டன, தடுப்புகள் எழுப்பப்பட்டன, தோட்டாக்களும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசி அனைத்தையும் இந்த மோடி அரசு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாது அவர்களை தேச துரோகிகள் என்று விளிக்க தொடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும்.

ஆனால், இந்த நன்றிகெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய காவல் துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள். நமது விவசாயிகள் தேசவிரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா?” என்று பதிவிட்டுள்ளார்.