கொங்குநாடு என்றாலே தலை சுற்றுகிறது: வடிவேலு கல... கல...!

 

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கியுள்ளார் நடிகர் வடிவேலு.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கான பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அதன்படி நடிகர் வடிவேலு முதலமைச்சர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது கொரோனா நிவாரணப் பணிகளுக்கு வேண்டி ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் அவர் வழங்கினார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  திரைப்படங்களிலும் ஓடிடி தயாரிப்பிலும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் ராமநாடு, ஒரத்த நாடு எல்லாம் உள்ளன. தமிழகம் நன்றாகவே உள்ளது. அதை எதற்காக பிரிக்க வேண்டும்? இதையெல்லாம் கேட்ட்கும்போது தலை சுற்றுகிறது என்று வடிவேலு தெரிவித்தார்.