லூசிஃபர் ரீமேக் கைவிடப்படவில்லை: நடிகர் சிரஞ்சீவி போட்ட அந்த ‘ட்வீட்’..!

 

தெலுங்கில் தயாராகவிருந்த ‘லூசிஃபர்’ படத்தின் ரீமேக் கைவிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இயக்குநர் மோகன்ராஜாவுக்கு வாழ்த்துக் கூறியது மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவுச் செய்தது. அதை தொடர்ந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் தெலுங்கு நடிகர் ராம் சரண்.

மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் தன்னுடைய தந்தை சிரஞ்சீவியை நடிக்கவைக்க அவர் முடிவு செய்தார். மலையாள பதிப்பில் மஞ்சு வாரியாரின் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய படக்குழு முனைப்பு காட்டி வந்தது.

அப்போது படத்தை இயக்குவதாக இருந்த மோகன் ராஜா, படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. மேலும் படத்தின் உரிமைகளை விற்பனை செய்ய ராம் சரண் வேறு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டன.

இந்நிலையில் நேற்று நடிகர் மோகன்ராஜாவுக்கு பிறந்தநாள். அதற்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கும் நிறுவனம் வாழ்த்து கூறி இருந்தது. இதன்மூலம் லூசிஃபர் தெலுங்கு ரீமேக் கைவிடப்பட்டதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.