புகழ்பெற்ற மலையாள நடிகர் இன்னோசெண்ட் மரணம்..!! 

மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இன்னோசெண்ட் கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 75.
 

கேரள சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் கோலோச்சியவர் இன்னோசெண்ட். சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், 5 படங்களை தயாரித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், சாலகுடி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். 

ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டார். மலையாள சினிமா நடிகர்களின் ‘அம்மா’ நடிகர் சங்கத்தின் தலைவராக 18 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு அவருக்கு தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் அதற்காக தொடர் சிகிச்சைகள் எடுத்து மீண்டு வந்தார். இதனால் அவர் திரைப்படங்கள் நடிப்பதில் இருந்து வெகுவாக குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி மீண்டும் அவருக்கு தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், நடிகர் இன்னோசெண்டுக்கு கோவிட் பாதிப்பு இருந்தது. மேலும் மூச்சு விடுவிதில் சிரமம் ஏற்பட்டது. அதையடுத்து பல உறுப்புகள் செயலிழந்து, முடிவில் இருதயம் இதய செயலிழந்தது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நடிகர் இன்னோசெண்ட் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், ப்ரித்விராஜ் உள்ளிட்ட திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்னோசெண்ட் மறைவுக்கு அஞ்சலி கூறி வருகின்றனர்.