தலைக்கேறிய போதையில் வாகனம் ஓட்டி விபத்து - பிரபல மலையாள நடிகர் கைது! 

 

மலையாள நடிகர் பைஜூ சந்தோஷ் (54) நேற்று நள்ளிரவில் மது அருந்திவிட்டு திருவனந்தபுரம் அருகில் கார் ஓட்டி வந்திருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பைக் மீது மோதி அருகில் இருந்த மின்கம்பம் மீது இடித்து நின்றிருக்கிறது. பைக்கில் வந்த நபர் கார் மோதியதால் சிறு காயங்களுடன் தப்பித்திருக்கிறார். விஷயம் கேள்விப்பட்டதும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

பைக்கில் இருந்த நபருக்கு பெரிய அளவில் அடி எதுவும் இல்லை என்றாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக பைஜூ சந்தோஷை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்திருக்கின்றனர். இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.