மனோபாலா மறைவுக்கு ரஜினி, சத்யராஜா, ராதிகா, சூர்யா இரங்கல்..!!

நடிகர் மனோபாலா உயிரிழந்தது குறித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பல்வேறு கலைஞர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

தமிழ் பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலாவுக்கு கடந்த இரண்டு வாரங்களாக கல்லீரல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார். 

சினிமாவில் ஒரு உதவி இயக்குநராக பணியாற்றத் துவங்கி, இயக்குநராகவும் நடிகராகவும் மாறி உச்சங்களை தொட்டவர் மனோபாலா. இவர் நடிப்பில் வெளியான நகைச்சுவை காட்சிகள், இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாப்படுகிறது. காலத்தால் மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளை அவர் தமிழ் சினிமாவுக்கு விட்டுச் சென்றுள்ளார்.

நடிகர் மனோபாலாவின் மறைவு எண்ணற்ற திரைக் கலைஞர்களை சோகமடையச் செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் குறிப்பில், ”பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல மனோபாலாவின் குருநாதரும் இயக்குநருமான பாரதிராஜா, ”என் மாணவன்
மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத 
பேரிழப்பாகும்” என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் சூர்யா, கார்த்தி, சத்யராஜ், ஹரீஷ் கல்யாண், சசிகுமார், ராதிகா சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் தங்களுடைய சமூகவலைதளங்களில் இரங்கல் பதிவிட்டுள்ளார். மேலும் பல நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கலை  மூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.