மன்சூர் அலி கானை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம்!

 

 நடிகை த்ரிஷாவை மன்சூர் அலிகான் தவறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சங்கம் மன்சூர் அலிகானை த்ரிஷாவிடம் மன்னிப்பு கோர வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமக முன் வந்து மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் மனுசூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அங்கு ஆஜரான மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதனை த்ரிஷாவும் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் மன்சூர் அலிகான் கொடுத்த பேட்டி ஒன்றில், த்ரிஷா விவகார அறிக்கையில், நான் மரணித்து விடு சொன்னதை என்னுடைய மக்கள் தொடர்பாளர் மன்னித்து விடு என்று தவறாக எழுதிவிட்டார் என்று சொன்னார்.

இதனிடையே தன்னுடைய பெயருக்கு களங்கம் கற்பித்ததாக கூறி, த்ரிஷா, சிரஞ்சீவி, குஷ்பு ஆகியோர் மான நஷ்ட ஈடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார் மன்சூர். இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மன்சூர் அலிகான் பேசியதற்காக உண்மையில் த்ரிஷாதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.

பொதுவெளியில் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா..? பொதுவெளியில் மன்சூர் அலிகான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். மன்சூர் அலிகான் தொடர்ந்து இப்படியான சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார். எந்த தவறும் செய்யவில்லை எனக் கூறும் மன்சூர் அலிகான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது ஏன் என்று கேள்வியும் எழுப்பினார்.

த்ரிஷா தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட தாங்களே அமைதியாக செல்லும் பட்சத்தில், இவர் ஏன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்ற கேள்வியை முன் வைத்தார். இரதரப்பையும் கேட்ட நீதிபதி மன்சூர் அலிகான் வழக்கு தொடர்பாக குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 22ம் தேதி ஒத்து வைத்து உத்தரவிட்டு இருக்கிறார்.