அதற்குள் விஜய் 66 தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய டிவி நிறுவனம்

 

தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 66 திரைப்படத்தின் டிவி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட். இந்த படத்தை அடுத்தாண்டு ஏப்ரலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கவுள்ளார்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை தில்ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்துக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதை அடுத்து, சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதன்மூலம் படத்தின் உருவாக்கப் பணிகளுக்கு முன்பே ரூ. 50 கோடி வருவாயை ஈட்டியுள்ளது தளபதி 66 படம்.