மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா: சூரரைப் போற்று படத்துக்கு 2 விருதுகள்..!

 

சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இரண்டு பிரிவுகளில் முக்கிய விருதுகளை வென்றுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி இந்தியளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் சூரரைப் போற்று. முதன்முதலாக ஓடிடி தளத்தில் வெளியாகி தேசியளவில் ஹிட்டடித்த முதல் படம் என்கிற பெருமையும் இப்படத்துக்கு கிடைத்தது.

இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் பங்கெடுத்தது. ஆன்லைன் மூலம் இந்த விழா முடித்துக்கொள்ளப்பட்டது. அப்போது இந்த படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகளை வென்றது.

அதேபோல ஷெர்னி படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இந்த விழாவில் ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்துக்காக எனக்கு கிடைத்த முதல் விருது என்று கூறி நன்றி தெரிவித்தார்.