தியாகராஜா குமாராஜா இயக்கும் வெப் சிரீஸ்- வரும் 18-ம் தேதி வெளியீடு..!!
 

உலகப் புகழ்பெற்ற மார்டன் லவ் தொடர் தமிழுக்கு வருகிறது. மார்டன் லவ் மும்பை, மார்டன் லவ் ஹைதராபாத் ஆகியவற்றை தொடர்ந்து மார்டன் லவ் சென்னை தொடர் தமிழில் தயாராகியுள்ளது.
 
 

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மார்டன் லவ் தொடர் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனுடைய நீட்சியாக பல்வேறு நாடுகளில், அந்தந்த நாட்டுக்குரிய கலாச்சார அமைப்புடன் மார்டன் லவ் தொடர் உருவானது.

அதன்படி இந்தியாவிலும் மார்டன் லவ் தொடர் இந்தி மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தயாராகியுள்ளது. அதில் தமிழில் தயாராகியுள்ள மார்டன் லவ் சென்னை வரும் 18-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

இந்த தொடரில் மொத்தம் 6 கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தை குறித்து பதிவு செய்கிறது. இந்த ஆறு கதைகளையும் ஒவ்வொரு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். அதன்படி ‘லாலாகுண்டா பொம்மைகள்’ என்கிற கதையை ராஜ்முருகன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த கதையில் ஸ்ரீ கவுரி ப்ரியா, வாசுதேவன் முரளி மற்றும் வசுந்தரா நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து ’இமைகள்’ என்கிற கதையை பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த கதையில் அசோக் செல்வன், டி.ஜே, பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ’காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ என்கிற கதையை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த கதையில் சம்யுக்தா விஸ்வநாதன், ரித்து வர்மா, பவன் அலெக்ஸ் மற்றும் அனிருத் கனகராஜன் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷய் என்பவர் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள கதை மார்கழி. மஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த இயக்குநர் பாரதிராஜாவும் இந்த ஆந்தலாஜி தொடரில் ஒரு கதை இயக்கியுள்ளார். அதற்கு பறவை கூட்டில் வாழும் மான்கள் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள அந்த கதையில் கிஷோர், ரம்யா நம்பீசன், விஜயலக்‌ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவும் இந்த தொடரில் ஒரு கதை இயக்கியுள்ளார். அதற்கு பெயர் நினைவோ ஒரு பறவை. இளையராஜா இசையமைத்துள்ள இந்த கதையில் வாமிகா மற்றும் பீபீ நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பெற்றுள்ள மார்டன் லவ் சென்னை தொடர் வரும் 18-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.