மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் 17 பேர் கூண்டோடு ராஜினாமா..!
மலையாள சினிமாவில் நடிகைகள், துணை நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. நடிகைகளும் தொடர்ந்து பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இப்படி தொடர் குற்றச்சாட்டுகளால் மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து, நடிகர் சங்கத்தின் செயற்குழுவை கலைத்துள்ளனர்.
பாலியல் புகாரில் சிக்கிய நடிகர்கள் எல்லாம் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் மோகன்லால் அவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என சிலர் போராட்டத்தில் குதித்தார்கள்.பிரச்சனை பெரிதாகியிருக்கும் இந்த நேரத்தில் அம்மா தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்திருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால். அவர் மட்டும் அல்ல அம்மா எக்சிகியூட்டிவ் கமிட்டி உறுப்பினர்கள் 17 பேர் ஒரே நேரத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நடிகர் சங்கமான அம்மாவின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என ஒட்டுமொத்தமாக பலர் ராஜினாமா செய்திருப்பதால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்மாவில் ஆண்களுக்கு பதில் பெண்களையும் உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும். தலைவர் பதவியில் நடிகையை நியமிக்கலாம். அவ்வாறு செய்தால் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறையும் என குரல் எழுந்திருக்கிறது.