மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப்: த்ரிஷ்யம் 3..??

மலையாள சினிமாவின் வெற்றிக்கூட்டணியான மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் ஐந்தாவது முறையாக இணையவுள்ளனர். இதுகுறித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 

கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரியளவில் வெற்றி அடைந்தது.

இதனுடைய இரண்டாவது பாகம் 2021-ம் ஆண்டு ஓ.டி.டி தளத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றது. அதே நடிகர்களுடன் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். அதையடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு, அங்கேயும் வெற்றி அடைந்தது.

இந்நிலையில், தற்போது ராம் முதல் பாகம் படத்திற்காக இணைந்து பணியாற்றி வரும் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப், ஐந்தாவது முறையாக மீண்டும் இணையவுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆஷிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. இது ஒருவேளை த்ரிஷ்யம் மூன்றாவது பாகமாக இருக்கலாம் என்கிற பேச்சு மலையாள சினிமா உலகில் எழுந்துள்ளது.