சினிமாவில் அறிமுகமாகிறாரா மோகன்லால் மகள்!

 

மலையாளத் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் 'லால் ஏட்டன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால், கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகை ஆட்சி செய்து வருகிறார். அவரக்கு பின்னர் அவரது மகன் பிரணவ் மோகன்லால் திரைத்துறையில் நுழைந்தது, ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

மோகன்லால் மற்றும் பிரணவ் மோகன்லால் இருவருமே தங்கள் திறமையால் தனித்துவமான அடையாளத்தை நிலைநாட்டியுள்ளனர். ஒரு லெஜண்டரி நடிகர் தனது மகனின் வெற்றிப் பயணத்தைப் பார்ப்பது, இந்திய சினிமாவிற்கே ஒரு பெருமையான தருணம்.

இப்படியான நிலையில்தான், கோகன் லாலின் இரண்டாவது மகள் திரைத்துறையில் அறிமுகமாகவுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

விஸ்மயா, 'துடக்கம்' (Thudakkam) என்ற மலையாளப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தை '2018' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்குகிறார். மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இது ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் 37வது படமாகும்.

 

சினிமா வெளிச்சத்தில் இருந்து பெரும்பாலும் ஒதுங்கியே இருந்த விஸ்மயா, ஒரு எழுத்தாளர் மற்றும் ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 'கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' (Grains of Stardust) என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ளார். தற்காப்புக் கலையிலும் பயிற்சி பெற்றவர் என்பதால், அவரது முதல் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"வாழ்நாள் முழுவதுமான சினிமாவின் முதல்படி" என மோகன்லால் தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது சமூக வலைத்தள பக்கங்களில் 'துடக்கம்' படத்தின் போஸ்டரை வெளியிட்டார். இந்த அறிவிப்பு, மோகன்லால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அப்பா, மகன், மகள் என ஒரே குடும்பத்தில் மூன்று நட்சத்திரங்கள் திரையுலகில் வலம் வருவது, மலையாள சினிமாவின் பெருமையாகும். விஸ்மயாவின் இந்த முதல் முயற்சி, நிச்சயம் அவருக்கு ஒரு சிறந்த 'துடக்கமாக' அமையும் என அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.