சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு..! 

 

சேலம் மாவட்டம், கத்தேரி கிராமத்தில் நெசவு தொழில் செய்பவர் காளி வெங்கட். அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது. அவரது ஒரே மகன் பத்து வயதான சந்தோஷ் வேல்முருகன். அப்பாவைப் போல அல்லாமல் அந்த வயதிலேயே சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வீட்டிலிருந்து காசு திருடி வாடகை சைக்கிளை எடுத்து ஓட்டப் பழகுகிறார். ஒரு நாள் சைக்கிளை விட சிறிது தாமதமாகிவிட பயத்தில் சைக்கிளுடன் பக்கத்து ஊரில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். காணாமல் போனதாக நினைத்து அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறார் காளி வெங்கட். சைக்கிள் வாடகையைக் கொடுப்பதற்காக அந்தக் கடையிலேயே வேலைக்குச் சேர்கிறார் சந்தோஷ். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் கமலக்கண்ணன் 80களின் கிராமம், கிராமத்து மனிதர்கள், அப்போதைய சைக்கிள் ஆசை என பலவற்றைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அவ்வளவு யதார்த்தமாய் நடித்துள்ளார்கள். 

இந்நிலையில்  புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ‘குரங்கு பெடல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி நடைபெறும் விழாவில் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விருது வழங்குகிறார்.