வில்லனை காப்பாற்றும் ஹீரோ- கஸ்டடி பட டிரெய்லர் எப்படி இருக்கு..??
தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு மற்றும் மன்மதலீலை படங்கள் நல்ல வெற்றியை பதிவு செய்தன. அதிலும் மாநாடு திரைப்படம் சிம்புவின் திரைவாழ்க்கைக்கு புத்துயிர் ஊட்டியது என்றே குறிப்பிடலாம்.
இப்படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு தெலுங்கு சினிமாவில் இயக்குநராக கால்பதிக்கிறார். நாக சைத்தன்யா ஹீரோவாக நடித்துள்ள ‘கஸ்டடி’ படம் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். எனினும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒன்றாக வெளிவருகிறது.
நாக சைத்தன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் சரத்குமார், அரவிந்த்சாமி, ப்ரியாமணி உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒன்றாக வெளிவந்துள்ளது.
அதிரடி த்ரில்லர் கதையமைப்பில் உருவாகியுள்ள படத்தில் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனை சாகவிடாமல் பார்த்துக் கொள்ளும் ஹீரோ என்பது தான் படத்தின் மையமாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒருசேர தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் மே 12-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.