அப்பா - மகள் பாசத்தை பேசும் படமாக உருவாகும் ‘நானி 30’..!! 

 

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வெளியான மாபெரும் வெற்றிப்படம் ‘தசரா’. நிலக்கரி சுரங்க பின்னணியில் உருவாகியிருந்த இந்த படத்தில் தர லோக்கலாக நானி நடித்திருந்தார். வித்தியாசமான தோற்றத்தில் அவர் இந்த படத்தில் நடித்திருந்தது அனைவரிடையே பாராட்டுக்களை குவித்தது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 30வது படத்தில் நானி நடித்து வருகிறார். வைர என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷூர்யுவ் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ‘சீதாராமம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கிறார். நானி - மிருணாள் தாகூர் இணையும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசைக்கிறார். 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி கிறிஸ்துமசையொட்டி வெளியாகிறது. இதையொட்டி போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நானியுடன் ஒரு சிறுமி இருப்பதை போன்ற போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது அப்பா - மகள் பாசத்தை பேசும் படமாக இருப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.