ரஜினியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

 

உ.பியில் நேற்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்.  அப்போது யோகியின் காலில் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் ரஜினிகாந்த் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தன்னை விட 20 வயது குறைந்த ஒருவரது காலில் விழுவது சரியாகுமா?’ என்று ஒரு சாராரும், ‘மரியாதை நிமித்தமாக காலை தொட்டு வணங்குவது தப்பில்லை’ என்று மற்றொரு சாராரும் அனல் பறக்க விவாதித்து வருகின்றனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த், வில்லன் நானா படேகரின் வீட்டில் சிறுமி ஒருவரிடம் பேசும் வசனங்களை மேற்கோள் காட்டி நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அப்படத்தில் ரஜினியின் காலில் விழுந்து ஆசிபெறுமாறு தனது பேத்தியிடன் நானா படேகர் கூறுவார். அப்போது அந்த சிறுமியை தடுக்கும் ரஜினி, ‘வணக்கம்’ சொன்னால் போதும் என்று அறிவுரை கூறுவார். ’காலா’வில் இடம்பெற்ற இந்தக் காட்சியை மேற்கோள் காட்டியுள்ள நெட்டிசன்கள் பலர் ‘பெரியவர்கள் காலில் விழுவதை தடுப்பது போல காட்சியில் நடித்த ரஜினிகாந்த் தன்னை விட வயது குறைந்தவர்கள் காலில் விழுவது எப்படி நாகரிகம் ஆகும்?’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு எதிர்வாதம் வைக்கும் மற்றொரு தரப்பினர், ‘யோகி ஆதித்யநாத் ஒரு மாநில முதல்வர் மட்டுமல்ல. கோரக்நாத் மடத்தின் பீடாதிபதியாகவும் இருக்கிறார். எனவே அவருக்கு மரியாதை செய்யும் விதமாக ரஜினி அவர் காலை தொட்டு வணங்கியதில் எந்த தவறும் இல்லை’ என்று கூறுகின்றனர்.