தீவிரமடையும் யுவன் வழக்கு : வீட்டின் உரிமையாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைப்பு..!
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து வந்தார். தற்போது இவர் துபாயில் குடும்பத்தோடு செட்டிலாகிவிட்ட நிலையில், ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், வீட்டின் மாத வாடகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எனவும், அட்வான்ஸ் 12 லட்சம் என அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளது. இதையடுத்து அண்மையில் இந்த வீட்டின் மாதவாடகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூபாய் 18 லட்சம் வாடகை தராமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து, வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை தொடர்ந்து 12 லட்சத்தை காசோலையாக அனுப்பினார். அதன் பின் ஓராண்டு வீட்டில் இருந்ததற்கான வாடகை பணத்தை தரவில்லை என்றும், வீட்டு உரிமையாளர் என்ற முறையில் வீட்டை காலி செய்யும் போது எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்காமல் வீட்டை காலி செய்து வருவதாகவும், அருகில் இருப்பவர்கள் மூலம் தான் யுவன் வீட்டை காலி செய்யும் விஷயமே எங்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். மேலும், 20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும், போனில் தொடர்பு கொண்டாலும் அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வாடகை மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.
யுவன் சங்கர் மீதான இந்த செய்தி காட்டுத்தீ போல பரவி ஊடகம் மற்றும் சோஷியல் மீடியாவில் பேசுபொருளானது. யுவன் மீதான இந்த குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில், தன்னை பற்றிய அவதூறு செய்தி பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் ஃபஸீலத்துல் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பல ஆண்டுகளாக பிரபலமான இசையமைப்பாளராக அறியப்படும் தன்னைப் பற்றி அவதூறாக தொலைகாட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் ஃபஸீலத்துல் ஜமீலா அளித்துள்ள பேட்டி தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், எனவே தனக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்சனையை உரிமையியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்