பிரபல படத்தொகுப்பாளும் இயக்குநருமான ஆர்.விட்டல் மாரடைப்பால் காலமானார்..!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் எடிட்டர் ஆர்.விட்டல். இவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வந்தார். அவர்கள் கூட்டணியில் 70 திரைப்படங்கள் உருவாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 300 திரைப்படங்களுக்கு மேல் படத்தொகுப்புபாளராக பணியாற்றிய விட்டல், ரஜினியின் முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, கழுகு உள்ளிட்ட 35 திரைப்படங்களுக்கு பணியாற்றி உள்ளார். மேலும் இவர் முத்தான முத்தல்லவோ, பெண்ணைச் சொல்லி குற்றமில்லை, முடிசூடா மன்னன் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்த ஆர்.விட்டல், சமீபகாலமாக கேன்சர் நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் அவருடைய இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இவருடைய மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதி சடங்கு இன்று (ஜூலை 27) நடைபெறுகிறது. இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.