ஆஸ்கரில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு சர்ச்சை- கம்மென்று இருந்த ராஜமவுலி..!!

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு படக்குழு எதுவும் வருத்தமோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை. 
 

ஆஸ்கார் விருது விழா வழங்கும் மேடையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பாலிவுட் படம் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் கூறியதுக்கு படக்குழு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களை கவலையடைச் செய்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள டால்பி திரையரங்கத்தில் 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் கோலாகலமாக நடந்தது. உலகளவில் இருந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ‘ஆர்.ஆர்.ஆர்’,  'The elephant whisperers', ’All That Breathes’ ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டன. 

அதன்படி சிறந்த பாடலுக்கான பிரிவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. முன்னதாக, அந்த பாடலுக்கு மேடையில் அந்த பாட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது பேசிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பாலிவுட் படம் என்று கூறினார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, பல நெட்டிசன்கள் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வுக்கு பிறகு தான், இசையமைப்பாளர் கீரவாணி மேடைக்கு வந்து ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் ஜிம்மி கிம்மல் பேச்சையும் தகவலையும் திருத்தம் செய்யவில்லை.

அதை தொடர்ந்து வெளியே ஊடகத்தை சந்தித்தார். அப்போது அவருடன் இயக்குநர் ராஜமவுலி உடன் இருந்தார். அவரும் ஜிம்மி கிம்மல் பேச்சுக்கு எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் கலிஃபோர்னியாவில் ஆர்.ஆர்.ஆர் படம் ரசிகர்களுக்கு திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்களில் ஒருவர் அந்த படத்தை பாலிவுட் படம் என்று கூறினார்.