கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி..!

 

பிரபல திரைப்பட பாடலாசிரியராக இருந்த பிறைசூடன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிறைசூடன் மறைவுக்கு தன்னுடைய ட்விட்டரில் இரங்கல் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என் ஊர்க்காரர் - உடன்பிறப்பு என தலைவர் கலைஞரால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் மனோபாலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ஆட்டமா தேரோட்டமா பாடலை 5 நிமிடத்தில் எழுதிக் கொடுத்தவர் பிறைசூடன். அவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மிகவும் எளிமையான மொழி நடையில் ஏராளமான வெற்றிப் பாடல்களை அவர் கொடுத்துள்ளார். பிறைசூடன் மறைவு இலக்கிய உலகத்திற்கும், திரைத்துறைக்கும் பெரும் இழப்ப் என நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.

பிறைசூடன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பல நல்ல திரைப் பாடல்களையும், பக்தி பாடல்களையும் வழங்கியுள்ளார். பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டவர். அவரைப் பற்றி பல மேடைகளில் பிறைசூடன் பேசியுள்ளார். அவரின் இழப்பு திரையுலகத்திற்கு மட்டுமல்லாமல் தமிழகத்துக்கும் பேரிழப்பு” என்று தெரிவித்தார்.