மீண்டும் ரிலீஸாகும் பொன்னியின் செல்வன் முதல் பாகம்- எப்போது தெரியுமா?

வரும் 28-ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் நிலையில், அதற்கு முன்னதாக படத்தின் முதல் பாகத்தை மீண்டும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

தமிழில் கொண்டாடப்பட்ட நாவல்களில் ஒன்று பொன்னியின் செல்வன். இதை திரைப்படமாக உருவாக்க பலரும் முயற்சித்தனர். ஆனால் சுமார் 70 ஆண்டுகாலமாக அது முடியாமல் போனது. இதையடுத்து கடுமையான கொரோனா சூழலில் இந்த நாவலை மணிரத்னம் படமாக உருவாக்கினார். அதன்மூலம் 5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல், 2 பாகங்கள் கொண்ட படமாக தயாரானது.

இந்த படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. தமிழில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டும் பிஎஸ்- 1 வெளியானது. இந்த படம் தமிழில் மட்டும் உலகளவில் ரூ. 450 கோடி வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.

எனினும் மற்ற மொழிகளில் பெரியளவில் ஓடவில்லை. குறிப்பாக தெலுங்கு, இந்தியில் படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கொடுத்தனர். குறிப்பாக அயலகத் தமிழர்கள் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடினர். 

இந்நிலையில் இதனுடைய இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி உலகளவில் வெளியாகிறது. இதற்கு தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு முன்னதாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெளியிட படக்குழு மீண்டும் முடிவு செய்துள்ளது.

வரும் ஏப்ரல் 21-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் பிஎஸ்-1 வெளியாகிறது. இதனால் இரண்டாவது பாகத்தை எந்தவித குழப்பமும் இல்லாமல் ரசிகர்கள் பார்க்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் கருதுகிறது. அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் படங்களை காணும் ஆவல், ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.