வெற்றிமாறனுக்கு ப்ரவீன் காந்தி சவால்..!

 

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் ஜல்லிக்கட்டு குறித்த கதையை கொண்டது என்று கூறப்படும் நிலையில் இதே போன்ற ஒரு கதை தன்னிடமும் இருப்பதாகவும் இரண்டு பேரும் இந்த படத்தை எடுப்போம், யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம் என்று இயக்குனர் ப்ரவீன் காந்தி சவால் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் வெற்றிமாறன், சூர்யா நடிப்பில் உருவாகயிருக்கும் ‘வாடிவாசல்’ படத்தை அறிவித்தார். ஆனால் அந்த படம் இப்போது உருவாகுமா என்ற சந்தேகம் இருக்கிறது, அப்படியே அந்த படத்தை வெற்றிமாறன் இயக்கினாலும், அதில் சூர்யா நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ப்ரவீன் காந்தி பேட்டி அளித்த போது ’என்னிடமும் ஒரு ஜல்லிக்கட்டு குறித்த ஸ்கிரிப்ட் இருக்கிறது, அந்த ஸ்கிரிப்ட்டின் அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டன, கடந்த ஆண்டு இந்த கதை தொடர்பாக வெற்றிமாறன் உடன் பேசுவதற்காக அவரை தொடர்பு கொண்டேன், ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

நான் வைத்திருக்கும் ஜல்லிக்கட்டு ஸ்கிரிப்ட் அருமையாக இருக்கும், என்னை யாராவது உசுப்பி விட்டால் அந்த படத்தை வாடிவாசலுக்கு போட்டியாக நான் எடுப்பேன், வெற்றிமாறனுடன் மோத நான் தயாராக இருக்கிறேன்’ என்று சவால் விடுத்தார். இந்த சவாலுக்கு வெற்றிமாறன் தரப்பிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் அமீர் உறுதியாக நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் சூர்யாவுக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.