இந்தியாவில் பிளாக் விடோ படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்..!

 

இந்தியாவில் கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பிளாக் விடோ என்கிற ஹால்வுட் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மார்வெல் நிறுவனம் ‘பிளாக் விடோ’ என்கிற பெண் சூப்பர்ஹீரோவை மையப்படுத்தி தயாரித்துள்ள படம் ‘பிளாக் விடோ’. பலமுறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட  நடிகை ஸ்கார்லெட் ஜோகன்சன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் 2017ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டு வரை நடைபெற்றது. படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட போது கொரோனா பிரச்னை உருவெடுத்தது. அதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில் ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால் பிளாக் விடோ திரைப்படம் திரையரங்குகளிலும், டிஸ்னி ஓடிடி தளத்திலும் ஒரேநாளில் வெளியானது.

இதன்மூலம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியான முதல் சூப்பர்ஹீரோ திரைப்படம் என்கிற பெருமை பிளாக் விடோ படத்துக்கு கிடைத்தது. எனினும் அமெரிக்காவில் ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் தான் பார்த்து வருகின்றனர்.

இந்தியாவில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் இங்கு இப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. ஆங்கிலம் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.