16 வயதினிலே பட தயாரிப்பாளர் உயிரிழப்பு- திரையுலகினர் இரங்கல்..!!
பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான படம் 16 வயதினிலே. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி, கவுண்டமணி என பலருக்கும் வாழ்வளித்த இந்த படத்தை தயாரித்தவர் தான் எஸ்.ஏ. ராஜ்கண்ணு.
தனது அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வாயிலாக 16 வயதினிலே படம் மூலம் சினிமாவில் கால்பதித்த அவர் கன்னி பருவத்திலே, கிழக்கே போகும் ரயில், வாலிபமே வா வா போன்ற நிறைய ஹிட் படங்களை அவர் தயாரித்துள்ளார்.
எனினும் 1988-ம் ஆண்டு அவருடைய தயாரிப்பில் வெளியான பூ பூத்த நந்தவனம், 1994-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மகாநதி உள்ளிட்ட படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால் அவருடைய சினிமா வாழ்க்கை அஸ்தமிக்கத் துவங்கியது.
இதனால் ராதிகா உள்ளிட்டோருக்கு உதவியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். பாரதிராஜா மட்டுமின்றி ராதிகா, கவுண்டமணி, ராஜேஷ், சுதாகர் போன்ற முத்திரை பதித்த நடிகர்களை அறிமுகம் செய்துவைத்த பெருமையும் எஸ்.ஏ. ராஜகண்ணுவையே சேரும்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த எஸ்.ஏ. ராஜகண்ணு உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா, நடிகை ராதிகா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.