எதிர்ப்புகள் எதிரொலி: சீதை வேடத்தில் கரீனாவுக்கு பதில் கங்கனா...!

 

பாலிவுட்டில் ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு சீதையை மையப் பாத்திரமாக வைத்து உருவாகும் படத்தில் கரீனா கபூருக்கு பதிலாக கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

வரலாற்று கதைகளில் பலராலும் ரசிக்கப்படுவதும் ராமாயணம். இந்த கதை இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல முறை படமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் தெலுங்கில் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதில் ராமனாக நந்தமுரி பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் நடித்திருந்தனர்.

தற்போது இதே கதையை அடிப்படையாகக் கொண்டு ‘ஆதிபுருஷ்’ என்கிற படம் தயாராகி வருகிறது. இதில் பிரபாஸ், சைஃப் அலிகான் போன்றோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் அதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் தங்கல் புகழ் இயக்குநர் நிதிஷ் திவாரியும், மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் சேர்ந்து மற்றொரு ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்கவுள்ளனர். இந்த கதை சீதையை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளது.

முன்னதாக இந்த படத்தில் சீதையாக நடிக்க படக்குழு கரீனா கபூரை அணுகியுள்ளது. அவருக்கு படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது, நடிக்கவும் ஆர்வம் காட்டியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளதால் ரூ. 12 கோடி ஊதியம் கேட்டுள்ளார்.

இதை கேட்டு படக்குழு ஆடிப்போயிவிட்டது. அதனால் தற்போது சீதையாக இப்படத்தில் நடிக்க கங்கனாவிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த படத்திற்காக திரைக்கதை எழுதுபவர் விஜேயந்திர பிரசாத். இயக்குநர் ராஜமவுலியின் தந்தையான இவர், கங்கனா நடித்த மணிகர்னிகா மற்றும் தலைவி படங்களுக்கும் திரைக்கதை எழுதினார்.

இவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கங்கனாவை நடிக்கவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதவிர கரீனா சீதையாக நடிப்பதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதும் இங்கே கவனிக்கத்தக்கது.