பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளிக்கு மோதும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன்..!

 

கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடித்துள்ள படங்கள்  தீபாவளி அன்று ஒரேநாளில் வெளிவருவதற்கான அறிகுறிகள் தமிழ் சினிமாவில் தென்படுகின்றன.

அஜித் மற்றும் விஜய் இருவரும் உச்சநட்சத்திரமாக திகழ்வதற்கு முன்னர், தமிழ் சினிமா கொண்டாடிய நடிகர்களாக இருந்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் இருவருடைய படங்களும் தீபாவளிக்கு வெளியானால் அன்று ரசிகர்களுக்கு டபுள் தீபாவளியாக இருக்கும்.

ஆறிலிருந்து அறுபது வரை - கல்யாண ராமன், மனிதன் - நாயகன் போன்று தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தன. அந்த வரிசையில் கடைசியாக 2005-ம் ஆண்டு ரஜினி நடித்த சந்திரமுகி படமும், கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படமும் தீபாவளி போட்டியில் மோதிக்கொண்டன. அதோடு சரி, அதற்கு பிறகு அப்படியொரு தீபாவளி தமிழக ரசிகர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’ படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படமும் இந்தாண்டு தீபாவளிக்கு ஒரேநாளில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்பதை படக்குழு உறுதி செய்துவிட்டது. ஊரடங்கு காலத்திலேயே விக்ரம் படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவுக்கப்பட்டு விட்டன. வரும் மே 3ம் தேதி முதல் இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் மீண்டும் துவங்கப்படவுள்ளன. தீபாவளியை குறித்துவைத்து விக்ரம் படக்குழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.