ரஜினிகாந்தின் திருவண்ணாமலை கோயில் விசிட் பின்னணி இதுதான்..!!

நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையை தரிசனம் செய்தது தொடர்பாக பல்வேறு பின்னணித் தகவல்கள் இணையதளத்தை ஆக்கிரமிக்க துவங்கியுள்ளன.
 

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்டு 10-ம் தேதி வெளிவரவுள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், ஜீவிதா, ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் சில போர்ஷன்கள் திருவண்ணாமலை மற்றும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது. அதற்காக ஒரு  தனியார் மருத்துவமனையின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். 

இதையடுத்து ரஜினிகாந்த் ஜூன் 1-ம் தேதி திடீரென திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையார் தரிசித்து வணங்கினார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோயிலுக்கு வந்த அவருக்கு, கோயில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதையை வழங்கியது. இதனால் பக்தர்களும் ரசிகர்களும் அவரை காண்பதற்கு திரண்டனர். 

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மயில்சாமி நெஞ்சு வலி காரணமாக திடீரென உயிரிழந்தார். அவர் உயிருடன் இருந்தபோது, ரஜினிகாந்த் திருவண்ணாமலைக்கு வந்து வழிபாடு நடத்த வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்து, அந்த ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கூறி வருகின்றனர்.