சமந்தாவுக்கு பதிலாக ராஷ்மிகா- ரெயின்போ ஷூட்டிங் துவக்கம்..!!

புதுமுகம் சாந்தன் ரூபன் இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா மற்றும் தேவ் மோகன் இணைந்து நடிக்கும் ‘ரெயின்போ’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.
 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் சமந்தா நடிப்பதற்கு, கடந்த 2021-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சமந்தாவுக்கு ஏற்பட்ட மையோசைட்டிஸ் நோய் பாதிப்பு காரணமாக, அவர் தீவிர சிகிச்சைக்கு ஆயத்தமானார்.

ஆனால் அவருடைய உடல்நிலையில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் சில மாத காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்கு முடிவு செய்துள்ளார். இதனால் சமந்தா ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் இருந்து விலகி வருகிறார்.

அந்த வரிசையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் படமும் அடங்கும். அண்மையில் அந்த படத்தில் இருந்து சமந்தா விலகியதை அடுத்து, அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதாநாயகனாக தேவ் மோகன் நடிக்கிறார்.

ரெயின்போ படத்துக்கான பூஜை நிகழ்வில் பங்கெடுத்த கதாநாயகி ராஷ்மிகா, முதன்முறையாக பெண்ணை மையப்படுத்திய கதையில், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எனது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறினார்.

முன்னதாக பூஜை முடிந்தவுடன், படத்துக்கான முதல் காட்சி கோலாகலமாக படமாக்கப்பட்டது. அப்போது கிளப் அடித்து, படத்தின் முதல் காட்சியை துவங்கி வைத்தவர் நடிகை அமலாவாகும். இவர் நடிகை சமந்தாவின் முன்னாள் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.