சரத்பாபுவுக்கு என்ன தான் ஆச்சு..?? உண்மையைச் சொன்ன சகோதிரி..!!

நடிகர் சரத்பாபு இறந்துவிட்டதாக கூறி சமூகவலைதளங்களிலும் குறிப்பிட்ட ஊடகங்களிலும் வெளியான தகவல் தொடர்பாக அவருடைய சகோதிரி உரிய விளக்கம் அளித்துள்ளார்.
 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழடைந்தவர் சரத்பாபு (71). இவருடைய நடிப்பில் வெளியான சலங்கை ஒலி, அண்ணாமலை, முத்து போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயது மூப்பின் காரணமாக சரத்பாபுவுக்கு உடல்நலக் குறைவு  ஏற்பட்டது.  அதற்காக பெங்களூருவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

அதை தொடர்ந்து சில நாட்களிலேயே மீண்டும் சரத்பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது, சரத்பாபுவுக்கு செப்சிஸ் என்கிற நோய் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

மேலும் அவருடைய ஒவ்வொரு உறுப்பும் செயலிழக்கத் துவங்கியது. இதனால் உயிர் காக்கும் கருவிகளுடன் சரத்பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவருடைய உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர் நேற்று இறந்துவிட்டதாகக் கூறி செய்தி வெளியானது. இந்த தகவலை பல்வேறு தெலுங்கு மற்றும் தமிழ் ஊடகங்களும் அறிவிப்பு வெளியிட்டன. ஆனால் உடனடியாக சமூகவலைதளத்தில் சரத்பாபுவின் சகோதிரி ஒரு பதிவிட்டார். அதில் அண்ணன் சரத்பாபுவுக்கு எதுவும் ஆகவில்லை. சரத்பாபு குறித்து பரவி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானது என்று கூறியுள்ளார்.

தற்போது சரத்பாபுவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை காரணமாக, அவருடைய உடல்நிலை தேறி வருகிறது. ஐ.சி.யூ-வில் இருந்த அவரை மருத்துவர்கள் தனி அறைக்கு மாற்றியுள்ளனர். விரைவில் அவர் பூரண நலன் பெற்று ஊடகங்களிடம் பேசுவார் என சரத்பாபுவின் சகோதிரி தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.