வெளியான ஷாக் தகவல்..! சந்தானம் காணாமல் போனதற்கு இதுதான் காரணமா?

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் சந்தானம். அவரிடம் இருந்த திறமையை கண்டுகொண்ட சிம்பு சினிமாவுக்கு அழைத்துவந்தார். அதன்படி மன்மதன் படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இருந்தாலும் அவருக்கென்று பெரிய அடையாளம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. விடாமுயற்சியுடன் போராடிவந்த சந்தானம் படிப்படியாக விஜய், அஜித் உள்ளிட்டோரின் படங்களில் நடிக்க ஆரம்பித்து தனக்கான தனியிடத்தை பிடிக்க ஆரம்பித்தார்.

ஒருகட்டத்தில் சந்தானத்தின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடிக்க ஆரம்பித்தது. கவுண்டமணி ஸ்டைலில் அவர் அடித்த கவுண்ட்டர்களும், டைமிங் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைத்தன. இதனால் வடிவேலு, விவேக் போன்று சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்கிற நிலை கோலிவுட்டில் நிலவியது. ஒவ்வொரு படத்திலும் தனது காமெடியில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து அந்தப் படத்தை அடுத்த தளத்துக்கு எடுத்து சென்றதும் சந்தானம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எவ்வளவுக்கு எவ்வளவு சந்தானத்தின் காமெடி ரசிக்கப்பட்டதோ அதே அளவுக்கு விமர்சனங்களையும் சந்தித்தது. என்றென்றும் புன்னகை படத்தில் அவர் ஒரு பெண்ணிடம் பேசிய வசனம் பெரிய சர்ச்சையானது. அதனையடுத்து அது மாற்றப்பட்டது. அதேபோல் அவர் மற்றவர்களை உருவ கேலி செய்கிறார் என்கிற விமர்சனமும் எழுந்தது உண்டு. இருப்பினும் சந்தானத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.

நன்றாக சென்றுகொண்டிருக்க திடீரென ஹீரோவாகும் முடிவை எடுத்தார் சந்தானம். ஆனால் அவர் ஹீரோவாக நடித்ததில் பெரிய வெற்றியை எதுவும் அவர் பெறவில்லை. டிக்கிலோனா, டிடி ரிட்டர்ன்ஸ், கிக் உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான்தான் கிங்கு உள்ளிட்ட படங்கள்கூட சரியாக போகவில்லை.
 

இந்நிலையில் சந்தானம் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

 

அவர் அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயனும், சந்தானமும் விஜய் டிவியிலிருந்து வந்தவர்கள். சிவகார்த்திகேயன் போகும் வேகத்துக்கு நாமும் போக வேண்டும் என்று சந்தானம் நினைத்ததுதான் அவருடைய மோசமான இந்த நிலைமைக்கு காரணம். அவரை ஆரம்பத்திலிருந்தே நாம் காமெடியனாகவே பார்த்துவிட்டோம். இனிமேல் நீங்கள் என்னதான் வாஷிங் மெஷினில் போட்டு புரட்டி எடுத்தாலும் சந்தானத்தை காமெடியன் என்கிற பிம்பத்திலிருந்து மாற்ற முடியாது. அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் சிவகார்த்திகேயனாக மாற வேண்டும் என நினைக்கிறீர்கள். அவருக்கு க்ளிக் ஆகிவிட்டது. ஆனால் சந்தானத்துக்கு க்ளிக் ஆகவில்லை. அதற்காக அவர் பல முயற்சிகளை எடுத்துவிட்டார். அப்படி எடுத்து தனது சொந்த பணத்தை இழந்ததுதான் மிச்சம். தற்போது அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக சந்தானம் படங்களை செய்துவருகிறார்" என்றார்.