சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் #SK21 படப்பிடிப்பு துவக்கம்..!!
 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் #எஸ்.கே21 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
 

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் பட தயாரிப்பு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சிம்பு நடிப்பில் உருவாகும் ஒரு படத்தையும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மற்றொரு படத்தையும் அவர் ஒன்றாக தயாரிக்கிறார்.

இன்று முதல் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை கமலுடன் சேர்ந்து சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

அதன்படி இன்று சென்னையிலுள்ள கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது. படக்குழுவுடன் தயாரிப்பாளர் கமல்ஹாசனும் விழாவில் கலந்துகொண்டார். அவர் ஆக்‌ஷன் கூறி படத்தின் ஷூட்டிங்கை துவங்கிவைத்தார்.

எஸ்.கே. 21 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, நடப்பாண்டில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.