காஷ்மீரில் நின்றுபோன சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு- காரணம் இதுதான்..!!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வரும் எஸ்.கே 21 படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 

ரங்கூன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கவனமீர்த்தவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் இயக்கி வரும் எஸ்.கே. 21 படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கான படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. அதையடுத்து காஷ்மீர் சென்ற படக்குழு, அங்கு விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிப்பதால், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வந்தன. காஷ்மீரில் மொத்தமாக 55 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் திடீரென அங்கு ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கிறது. அதுதொடர்பான அரசு நிகழ்ச்சிகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. அதையொட்டிய பாதுகாப்பு காரணங்களுக்காக எஸ்.கே 21 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படக்குழுவினர் சென்னைக்கு திரும்பிவிட்டதாக தெரியவந்துள்ளது.