சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்துக்கு சுபம் போட்ட படக்குழு..!!

விடுதலை படத்துக்கு பிறகு நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் கொட்டுக்காளி படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் ஹீரோவாக நடிப்பதுமட்டுமில்லாமல், படங்களை தயாரிக்கவும் செய்கிறார். ஏற்கனவே பல்வேறு படங்களை தயாரித்துள்ள அவர், சூரி நடிப்பில் உருவாகி வரும் கொட்டுக்காளி படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் பட இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் எழுதி இயக்கியுள்ளார்

கொட்டுக்காளி படத்தில் சூரி மற்றும் மலையாள சினிமா புகழ் அன்னா பென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சக்தி பணியாற்றியுள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்தார். இந்த படம் அவருடைய நடிப்புத் திறமையை நன்றாக வெளிப்படுத்தியது. அந்த வரிசையில் கொட்டுக்காளி படமும் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.