வெப் சிரீஸில் கால்பதிக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்..!!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளும், திரைப்பட இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் வெப் சிரீஸ் துறையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தமிழில் கோச்சடையான் என்கிற மோஷன் பிக்சர் அனிமேஷன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். வெளிநாட்டில் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃப்கெட்ஸ் படித்த இவர், பல்வேறு திரைப்படங்களுக்கு வரைகலை தொழில்நுட்பக் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

அ..ஆ படம் முதல் சிவாஜி வரை நிறைய படங்களுக்கான கிராஃபிக்ஸ் பணிகள் அனைத்தும் சவுந்தர்யா ரஜினிகாந்த் மேற்பார்வையில் தான் நடந்துள்ளன. எனினும், அவருடைய இயக்கத்தில் வெளியான கோச்சடையான் படம் படுதோல்வி அடைந்தது. அப்போது விழுந்த ரஜினி தான், இப்போது வரை எழ முடியவில்லை.

அதை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அந்த படமும் பெரியளவில் வெற்றி அடையவில்லை. இதையடுத்து பொன்னியின் செல்வன் நாவலை வெப் சிரீஸாக தயாரிக்கும் பணியில் களமிறங்கினார். முதல் சீசனுக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் நடந்தன. ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

இந்த வரிசையில் அவர் வெப் சிரீஸில் கால்பதிக்கிறார். அவர் இயக்கும் தொடரில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.