நகை திருட்டில் திடீர் திருப்பம்... ஐஸ்வர்யாவின் புதிய புகார் !
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா, கடந்த பிப்ரவரி மாதம் தனது வீட்டில் இருந்த விலை மதிப்புமிக்க நகைகள் மற்றும் வைர கற்கள் திருடு போயிருப்பதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த பணி பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஈஸ்வரியிடம் விசாரணை நடத்தியதில், முதற்கட்ட 100 சவரன் நகையும், அடுத்த கட்டமாக 43 சவரன் நகையும் கைப்பற்றப்பட்டது. அதோடு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றின் ஆவணத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். இதுதவிர பல கோணங்களில் ஈஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் 60 சவரன் மட்டுமே காணாமல் போயிருப்பதாக ஐஸ்வர்யா புகார் கொடுத்திருந்தார். ஆனால் 143 சவரன் நகை கைப்பற்றப்பட்டுள்ளது. இது போலீசாரிடம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக 200 சவரன் நகை திருடு போயிருப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை ஐஸ்வர்யா மீண்டும் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.