பிரமாண்டமாக நடக்கும் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா- எப்போது தெரியுமா?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்துக்கான ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.
 
 

தமிழில் கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் . முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர் அடுத்ததாக வெளியான டாக்டர் படம் மூலம் உச்சத்தை தொட்டார். இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்துக்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அந்த படம் வெளியாகி படுதோல்வியை கண்டது. அதனால் நெல்சனின் திரைவாழ்க்கையே அஸ்தமிக்கும் அளவுக்கு பல விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. இதற்கிடையில் நடிகர் விஜய் செய்த திரைக்கதை மாற்றங்களால் தான் பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்தது என்று கூறப்பட்டது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக நெல்சனுக்கு ரஜினிகாந்த் நடிப்பில் படம் இயக்கும் வாய்ப்பை வழங்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் படத்துக்கு ‘ஜெயிலர்’ என்று வைக்கப்பட்ட தலைப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அது தற்போதும் தொடர்கிறது.

இதுவரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கியுள்ளன. இந்த படம் வரும் ஆகஸ்டு 10-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன்,  தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு என பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை மாதம் இறுதியில் நடக்கும் என்று கூறப்படுகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அமிதாப் பச்சன் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஜெயிலர் படத்துக்கு ஒரு பான் இந்தியா அடையாளம் கிடைக்கும் என படக்குழு எண்ணுகிறது.