சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் படத்துக்கு தடை: நீதிபதிகள் உத்தரவு..!

 

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவருடைய மரணம் தொடர்பான சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் மற்றும் சீரியல்களை உருவாக்க பல்வேறு தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த வரிசையில் திலீப் குலாட்டி என்பவர் ‘நய்யே: தி ஜஸ்டிஸ்’ என்கிற பெயரில் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து நடிகர் சுஷாந்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கான விசாரணை நடைபெற்று வந்த போது, படத்தில் சுஷாந்த் சிங் பெயர் மற்றும் அவர் தொடர்பான எவ்வித தகவல்களையும் பயன்படுத்தவில்லை என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் தற்போது முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ’நய்யே: தி ஜஸ்டிஸ்’ படத்தை வெளியிடக்கூடாது என படக்குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வரும் 11-ம் தேதிக்குள் மீண்டும் விசாரணை செய்யப்படும் எனவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.