அண்ணாத்த படத்தை ஆபாசமாக விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்க! ரஜினி ரசிகர்கள் போலீஸில் புகார்!!

 

சன் பிக்சர்ஸ் தயாரித்து தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தை சிவா இயக்கி இருந்தார். அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு குடும்பங்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக சிவா தெரிவித்து இருந்தார். சமூகத்தளங்களில் அண்ணாத்த பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானது. 

PlipPlip என்ற யூடிபில் அண்ணாத்த படத்தை அசிங்கமான முறையில் விமர்சனம் செய்துள்ளதாகக் கூறி அதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளர்கள் P.K.தீரவாகசம், S. சுவாமிநாதன் கூட்டாக கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது,

“கடந்த 13.11.2021 அன்று PlipPlip யூடிப் சேனலானது அண்ணாத்த ரோஸ்ட் என்ற பெயரில் அண்ணாத்த படத்தின் விமர்சனத்தை வெளியிடுவதாகக் கூறி, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவர் மிகவும் ஆபாசமாக ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு பற்றி அசிங்கமான வார்த்தைகளால், அந்நிகழ்ச்சியில் பலமுறை கூறியும் திரைப்படத்தில் வரும் பெண் கதாப்பாத்திரத்தின் பெயரை ஆபாசமுறையில் வெளிப்படுத்தியும் மேலும் அண்ணன் தங்கை உறவுகளை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை கெடுக்கும் நோக்கத்தோடு பெண்களையும் பெண்களுக்கான உறவுகளையும் மிகவும் கேவலப்படுத்தி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தது.

மதிப்பிற்குரிய தாங்கள் தமிழகத்தின் பண்பாட்டையும் பெண்களை கொச்சைப்படுத்தியும் தாரம் மற்றும் தங்கைகளின் உன்னத உறவுகளை கேவலப்படுத்தும்படியாக நடந்து கொண்ட மேற்படி PlipPlip யூடியோ சேனலை தடை செய்யவும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சட்டப்படி கைது செய்து மேல் நடவடிக்கை தொடரவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ரஜினிமன்ற நிர்வாகிகள், ரசிகர்களுடன் திரளாகச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள், காவல்துறை உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.